நீலகிரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி ஆட்சியர் உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வீட்டில் உள்ளவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து வீடுகளுக்கும் உள் புறத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ”தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களாக வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா பாதித்துள்ள இடங்களில் அனைத்து வீடுகளில் உள்ள அனைவரும் வீட்டிற்குள்ளேயும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அந்த பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கு உள் புறத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருற்கு யாரேனும் விதி மீறி வெளியில் நடமாடினால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தினசரி சந்தைகளில் மளிகை கடைகள் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயங்கும்.
மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்காதவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.