'அப்போ திட்னாங்க, இப்போ பாராட்டுறாங்க' - ரூ.80க்கு தக்காளி விற்பனை செய்யும் ஊட்டி சகோதர்கள்!

Tomato Tamil nadu
By Jiyath Aug 03, 2023 10:45 AM GMT
Report

ஊட்டி குந்தா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேர் ரூ.80க்கு தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்கள். 

தக்காளி விலை

தக்காளியின் விலை உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை எட்டியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேர் தக்காளியை விவசாயம் செய்து அவற்றை மிகவும் குறைந்த விலையில் ரூ.80க்கு உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

ரூ.80க்கு விற்பனை செய்யும் ஊட்டி சகோதரர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள குந்தா கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராமன் மற்றும் புட்டுசாமி . இவர்கள் இருவரும் இனைந்து குந்தா பாலம் அருகில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

நீலகிரியில் வழக்கமாக விளைவிக்கக்கூடிய உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், பூண்டு உள்ளிட்ட பயிர்களை வழக்கமாக சாகுபடி செய்து வந்தனர்.

இந்தமுறை சற்று வித்தியாசமாக தக்காளியை பயிரிட விரும்பினார்கள். இதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து 50 சென்ட் இடத்தில் நடவு செய்தனர்.

குவியும் பாராட்டு 

இந்நிலையில் தற்போது விளைந்து காய்த்து தொங்கும் தக்காளிகளை அறுவடை செய்து சகோதரர்கள் இருவரும் உள்ளூர் மக்களுக்கு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள். இதற்காக பல்வேறு மக்கள் இந்த சகோதரர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் பேசுகையில் " கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை வீட்டுத் தேவைக்காக குந்தா பகுதியில் தக்காளி பயிரிட்டோம். அப்போது நல்ல விளைச்சல் கிடைத்தது. அதிகமான அளவு சாகுபடியும் செய்தோம்.

பின்னர் வேர்ப்புழு பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தக்காளி சாகுபடியை கைவிட்டோம். இந்த முறை தக்காளி சாகுபடி செய்யலாம் என்று முடிவு செய்து அதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 1,000 நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம்.

ஆனால் அப்போது தக்காளி கிலோ ரூ.10க்கு மட்டுமே விற்பனையானது. அப்போது தக்காளியை ஏன்டா நடவு செய்கிறீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டனர். அவர்கள் கூறுவது எதையும் கேட்காமல் நடவு செய்தோம்.

தற்போது தக்காளியை அறுவடை செய்து உள்ளூர் மக்களுக்கும், சின்ன கடைகளுக்கும் கிலோ ரூ.80 விற்பனை செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்ததுள்ளது என்று அந்த சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.