கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள உதவ இது ஒன்றே வழி : அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
கொரோனா 2 ஆம் அலையை முழுதாக கட்டுப்படுத்தி உள்ளோம் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுரை மாவட்டத்தைப் பொறுத்த வரை 4 லட்சத்து 17 ஆயிரம் பேர்க்கு முதல் தவணை தடுப்பூசியும், 90 ஆயிரம் பேர்க்கு 2 தவணைகள் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளதாகவும் கூறினார். நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 14 ஆயிரம் பேரில் 72 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கொரோனா பாதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைவு என்பதால் கொரோனா 2ம் அலை மதுரை மாவட்டத்தில் முழுமையாக கட்டுப்படுத்தப் பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிறந்த மருத்துவக் குழு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும், கிராமம் கிராமமாக வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதனாலேயே இது சாத்தியப்பட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா 3ம் அலை தாக்கம் தொடங்கி, பரவல் ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் 3ம் அலையைக் கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், 2ம் அலைக்கு தயார்படுத்திய சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள், கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் என சிறப்பான கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளதால், கொரோனா 3ம் அலையை நாம் எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
மேலும் குறைவான தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை நாளை முதல் தமிழகஅரசு சேகரிக்கும் என்றும், அதனால்தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். அது ஒன்றே கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் ஒரே வழி என்றும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.