உதயநிதிக்கான பில்டப் திருவிழா நடந்துட்டு இருக்கு - அண்ணாமலை..!
நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம். உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழாவாக நடந்து கொண்டிருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
செயல்வீரர்கள் கூட்டம்
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம், சென்னை சோழிங்கநல்லூரில், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடத்தில் சென்னை மழை நீர் வெள்ள பாதிப்பை குறித்து பேசிய அண்ணாமலை, மழை மற்றும் கனமழைக்கான முன்னறிவிப்புகளை வழங்கிய நிலையில், மஞ்சள் எச்சரிக்கை எப்படி சிவப்பு எச்சரிக்கையாக மாறுகிறது என்பதை இங்கிருப்பவர்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தென் தமிழகத்தில் கனமழை பெய்தபோது, திருநெல்வேலி மேயர் சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநாட்டிற்காக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார் என்று சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
குடும்ப ஆட்சி தான்
சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கும் விஷயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தெளிவாக உள்ளார் என்ற அண்ணாமலை, அதற்கான ஒத்திகை தான் தற்போது நடந்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அறிவாளி ஆகிவிட்டார் என்பது போல தமிழக மக்களுக்கு காட்டுகிறார்கள் என்று சாடி, எப்படி சினிமாவில் ஹீரோவை அறிமுகப்படுத்துவார்களோ அதுபோல, உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது என்றார்.
முதல்வரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை என்றும் உதயநிதியை துணை முதல்வராக கொண்டுவந்து முதல்வராக்குவதில்தான் அவரது கவனம் அனைத்தும் இருக்கிறது என்று கூறிய அண்ணாமலை, இங்கு ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருக்கிறது என்றார்.