ஆன்லைன் ரம்மி கடனால் பிரவுசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

onlinerummy youthsuicide
By Petchi Avudaiappan Jan 10, 2022 06:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் தொல்லையின் காரணமாக பிரவுசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் குளோபல் நெட் பிரவுசிங் சென்டர் நடத்திவந்த தினேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கோயம்பேடு முல்லைத்தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டின் படுக்கையறையில் சென்று உறங்கியபோது தினேஷ் வீட்டின் ஹாலிலேயே படுத்து உறங்கியுள்ளார்.

இன்று அதிகாலை அவரது மனைவி அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் தினேஷ் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. அந்தக் கடிதத்தில் தான் பலரிடமிருந்து 15 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கடனாக வாங்கியதாகவும், வேறு நபர்களுக்கு சில லட்சங்களை கடனாக கொடுத்ததாகவும், அந்த பணம் திரும்பி வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 யாருக்கெல்லாம் தான் பணம் கொடுத்த விவரங்களையும், யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள் என்பதையும் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தன் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தினேஷின் மனைவியிடம் விசாரணை செய்தபோது தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெற்ற கடனை திருப்பித்தர முடியாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தினேஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.