வங்கி கணக்கு இல்லாமலே ஆன்லைன் பேமென்ட் - எப்படி தெரியுமா?
வங்கி கணக்கு இல்லாமலே UPI பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை
டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மனிதரை காண்பது அரிதிலும் அரிது. குண்டூசி வாங்குவதில் இருந்து தங்கம் வாங்கும் வரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி விட்டனர்.
Google pay, PhonePe போன்ற செயலிகள் மூலம் QR Code ஸ்கேன் செய்து நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
UPI Circle
ஆனால் வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை இருந்தது. உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேரிடமும் ஸ்மார்ட் போன் இருந்தாலும் அனைவரிடமும் வங்கி கணக்கு இருப்பதில்லை.
இந்நிலையில் வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஆன்லைன் பேமென்ட் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. UPI Circle என்ற வசதி மூலம் வங்கி கணக்கு இல்லாமலே உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தினர் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
அதிகபட்சம் 5 பேர்
உதாரணத்திற்கு ஒரு வீட்டில் கணவர் மட்டும் வங்கி கணக்கு வைத்திருந்து UPI செயலியை பயன்படுத்தினால், அந்த வங்கி கணக்கு மூலம் அவரின் மனைவி, குழந்தைகள் பெற்றோர் ஆகிய இரண்டாம் பயனாளர்கள் தங்களது செல்போனில் உள்ள upi செயலி மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யலாம். அதிகபட்சமாக 5 இரண்டாம் பயனாளர்களை இணைத்து கொள்ள முடியும்.
இதற்கு வங்கி கணக்கு வைத்திருப்பவர் மற்றவர்களை தனது UPI Circle-ல் இணைக்க வேண்டும். வங்கி கணக்கு வைத்திருக்கும் முதன்மை பயனாளருக்கே முழுக் கட்டுப்பாடு இருக்கும். UPI Circle-ல் இணைக்கப்படும் இரண்டாம் பயனாளர்கள் தன்னிச்சையாக பரிவர்த்தனை மேற்கொள்ளலாமா அல்லது முதன்மை பயனாளரின் அனுமதியுடன் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமா என்பதை முதன்மை பயனாளர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பண வரம்பு
இரண்டாம் பயனாளர்கள் தன்னிச்சையாக பரிவர்த்தனை மேற்கொள்வதென்றால் மாதம் ரூ.15,000 வரை முதன்மை பயனாளரின் வங்கிக் கணக்கைக் கொண்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாலம். இவர் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, முதன்மை பயனாளரின் அனுமதி தேவை இல்லை.
முதன்மை பயனாளரின் அனுமதியுடன் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், மாதம் ரூ.5,000 வரை மட்டுமே UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் முதன்மை பயனாளரின் அனுமதி தேவைப்படும்.
இந்த UPI Circle வசதி Google pay, PhonePe, Paytm என பெரும்பாலான UPI செயலிகளில் இந்த வசதி உள்ளது.