ஆன்லைன் கேமில் இருந்து வெளியில் வரமுடியவில்லையா..மீள்வது எப்படி?
ஆன்லைன் விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு என்றாலும், இதில் பலரும் தங்களை தொலைத்து அந்த விளையாட்டுக்கே அடிமையாகி விடுகின்றனர்.
போதைப் பொருளுக்கு எப்படி அடிமையாகின்றனரோ, அதேபோல் ஆன்லைன் கேம்களுக்கும் பலர் அடிமையாகி விடுகின்றனர்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சமூகத்தில் இருந்து விலகியே இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்பு, அவற்றில் இருந்து விடுபட உளவியல் ஆலோசகர் நான்சி குரியன் வழங்கும் ஆலோசனைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
டிஜிட்டல் சார்ந்த ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் பலரும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது அதிகரித்து உள்ளது.
ஏனெனில், இதுபோன்ற ஆன்லைன் கேம்கள் கோபத்தை தூண்ட செய்கின்றன. எந்த நேரமும் ஆன்லைன் கேம்களில் மட்டுமே உங்களின் மனது செல்லும்.
இதுபோன்ற கேம்களை உருவாக்குபவர்கள் உளவியல் ரீதியான விஷயங்களைத் தெரிந்து கொண்டு அதனை வீடியோ கேம்களிலும் வைக்கின்றனர்.
இதனால் நீங்கள் எப்போதும் அந்த கேம்களை மட்டுமே விளையாட செய்வீர்கள். மேலும், இது போன்ற விளையாட்டுகளால் நீங்கள் உங்களை உங்களின் குடும்பத்தில் இருந்தும் கூட தனிமைப்படுத்திக் கொள்வீர்கள்.
உறவுகளிடம் இருந்து நீங்கள் விலகிச் செல்வீர்கள். ஆன்லைன் விளையாட்டுகள் முன்பு இருந்ததை விட அதிகமாக இருக்க தொழில்நுட்பம், இணைய வளர்ச்சி போன்றவை காரணம் என்றாலும், கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட ஆன்லைன் வகுப்புகளால், இந்தப் பிரச்சனை அதிகரித்து உள்ளது.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் மொபைலை கொடுத்துவிட்டு மற்ற செயல்களில் ஈடுபடுவர். அந்த சமயத்தில் பிள்ளைகள் மொபைலை ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, இதுபோன்ற கேம்களை விளையாடவும் பயன்படுத்துகின்றனர்.
பொதுவாகவே ஆன்லைன் கேம்கள் குழந்தைகளை கவரும் வகையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதுபோன்ற கேம்கள் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் பாதிக்கிறது.
இளைய சமுதாயத்தினர் கூட தற்போது இதுபோன்ற ஆன்லைன் கேம்களை இரவு, பகல் பார்க்காமல் விளையாடுகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் இது போன்ற கேம்களுக்கு அடிமையாகி தங்களின் உயிரையும் விடுபவர்கள் கூட இருக்கிறார்கள்.
உங்கள் வீடுகளில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையான பிள்ளைகள் இருப்பின் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், அன்பாக எடுத்துக் கூறுங்கள்.
ஆன்லைன் விளையாட்டு பற்றிய மோசடிகள், பண இழப்பு பற்றியும் உங்களின் பிள்ளைகளிடம் விளக்குங்கள். டீன் ஏஜ் வயதினர் இது போன்ற விளையாட்டுகளில் இருந்து விடுபட, தங்களுக்கு பிடித்த வேறு செயல்களில் ஈடுபடலாம்.
உதாரணமாக, ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு முன்னர் நீங்கள் உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு, உடலுழைப்பு சார்ந்த விளையாட்டுகளில் கவனம் செலுத்தி இருப்பீர்கள்.