ஆன்லைன் சூதாட்டம்.. வழக்கை தமிழக அரசு விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் - ராமதாஸ்!
உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை தமிழக அரசு விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,தமிழகத்தில் இருந்து ஓர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது என்றால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் பணம் எத்தனை ஆயிரம் கோடி சூதாட்டத்தின் மூலம் சுருட்டப்படும்;
அதனால் தமிழகத்தில் எத்தனை லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வரும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு ஆகும்.
நிலத்தில் வெட்ட வெட்ட முளைக்கும் களைகளைப் போல, ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய, தடை செய்ய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும், மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. பாமக நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது.
ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி,
போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 11 மாதங்களில் மொத்தம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகள் அதிகரிப்பதையும்,
தமிழக அரசு
லட்சக்கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வருவதையும் தடுக்க முடியாது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழக அரசின் மேல்முறையீடு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இதை சுட்டிக்காட்டி ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவோ,
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் சொத்துகளை இழந்து தவிக்கின்றன.
இதே நிலை தொடருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும்,
சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.