தமிழக முக்கிய கோயில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் – அமைச்சர் ரமேஷ்
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருவண்ணாமலையில், ஆந்திராவில் இருந்து வந்த பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி ஒரு மர்ம நபர் பண மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் புதிய நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது.
திருவண்ணாமலைக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலர் அவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில், விரைவாக தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களை ஏமாற்ற முயன்ற மர்ம நபரை கோயில் நிர்வாகத்தினர் கண்டறிந்தனர்.
விசாரணை நடத்தப்பட்டபோது அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் கண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை கட்டாயமாக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கூட்ட நெரிசலை குறைப்பதோடு, சிறப்பு தரிசனம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளையும் தடுக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர். முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட தரிசன அனுமதி வழங்கும் நடைமுறையை ஓரிரு மாதங்களுக்குள் அமல்படுத்த அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.