என்ன செய்ய போகிறார் ஆளுநர்? மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் தடை மசோதா சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
சட்டமசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் பணத்தை இழந்த நிலையில், இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவதற்கு தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப். 26-ல் ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில், அக். 19-ல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு, கடந்த நவ.24-ல் அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். அதற்கு 24 மணி நேரத்தில் சட்டத்துறை விளக்கம் அளித்திருந்தது.
ஆனாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் கடந்த டிச. 1-ல், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.
அந்த சந்திப்பின்போதும் அவர்களிடம் சட்ட மசோதா தொடர்பாக சில சந்தேகங்களை ஆளுநர் கேட்டுள்ளார். அதற்கும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
மாறாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி மசோதாவை இம்மாதம் முதல் வாரத்தில் அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை, மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல்
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடைக்கு சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் இனியொரு உயிர் பறிபோகக் கூடாது, மக்களை காப்பதே அரசின் கடமை.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர், இந்த சட்டம் அறிவால் உருவாக்கப்பட்டது மட்டுமல்ல இதயத்தால் உருவாக்கப்பட்டது என பேசினார்.
இதை தொடர்ந்து ஆன்லைன் தடை சட்ட மசோத ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.