கடும் எதிர்ப்பையும் மீறி தமிழக ஆழ்கடலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி
தமிழக ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ONGC நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
எரிவாயு எடுக்க அனுமதி
தமிழ்நாட்டின் ஆழ் கடல் அருகே உள்ள 4 பகுதிகள் உட்பட இந்தியா முழுவதும் 22 பகுதிகளை உள்ளடக்கிய 1,36,596 சதுர கிலோமீட்டரில், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஏலம், கடந்த ஜனவரி 2024 மத்திய எரிசக்தி இயக்குனரகம் (DGH) சார்பாக விடப்பட்டது.
தற்போது இந்த ஏலம் எடுப்பதற்கான அனுமதியை, ONGC நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 4 பகுதிகள்
இதன்படி, சென்னை அருகே உள்ள ஆழ்கடலில் 1 பகுதியிலும், கன்னியாகுமரி தென்முனையில் உள்ள ஆழ்கடலில் 3 இடங்களிலும் என மொத்தமாக 32485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட உள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கப்படும் என மீனவ சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த சூழலில் எதிர்ப்பையும் மீறி, தமிழகத்தின் 4 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.