ஒருதலைக் காதல்; பள்ளி மாணவியை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர் சடலமாக மீட்பு..!
மணப்பாறையில் காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு ஓடிய நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம்,மணப்பாறை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் +1 படித்து வருகிறார்.
இவர் நேற்று தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.பின்பு அவர் தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பள்ளி மாணவி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே வந்த போது வலிபர் ஒருவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
பள்ளி மாணவியோ காதலை ஏற்க மறுத்துள்ளார்.இதையடுத்து மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குததியுள்ளார்.
10க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவியை குத்திவிட்டு வாலிபர் தப்பியுள்ளார். பலத்த காயம் அடைந்த அந்த மாணவி ரத்தவெள்ளத்தில் சத்தமிட்டபடி கீழே விழுந்தார்.
இதைக்கண்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவியை கத்தியால் குத்தியது மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த கேசவன் வயது 22 என்பது தெரியவந்தது.
கேசவன் மீது கடந்த ஆண்டு அந்த மாணவியை கடத்தி சென்றது தொடர்பாக போக்சோவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்தநிலையில் தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வந்த நிலையில் ரயில்வே பாதையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறியாத வயதில் காதல் என்ற மோகத்தால் பெற்றோர்களை நினைத்து பார்க்காமல் இளைஞர்கள் சிலர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அழித்துக்கொள்கின்றனர்.
பெண்கள் பள்ளி அருகே காவலர்களை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.