இலவசம்...இலவசம்...ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு...!
திருமங்கலத்தில் தனியார் இறைச்சிக்கடையில் ஆடி மாத சலுகை விற்பனை நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரன் என்பவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடை தொடங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வந்தார்.
அந்த வகையில் தற்போது ஆடி மாதம் என்பதால் ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளில் மிஞ்சும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அவரது சலுகை திருமங்கலம் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மேலும் ஆடி மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும் என்று சந்திரன் கூறியுள்ளார்.