சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 1 லட்சம் பேர் அட்மிஷன்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-2022 ஆண்டு மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள 281 பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி 2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 1,01,757 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 281 மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை நேற்று நிலவரப்படி 1,01,757 மாணவர்கள் உள்ளதாகவும், 2021-22 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 27,311, இதில், தனியார், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறிய சுமார் 19,038 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.