சென்னையில் வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!
சென்னை கத்திப்பாராவில் வழிகாட்டி பெயர் பலகை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து
சென்னையில் நேற்று மாலை கத்திப்பாராவில் மாநகர பேருந்து மோதியதில் வழிகாட்டி பெயர் பலகை துாண் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
சென்னை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று மதியம் மாநகர பேருந்து சென்றது. அப்போது பேருந்து பரங்கிமலையில் இருந்து ஆலந்துார் கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பிய போது,
அதிவேகமாக வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வழிகாட்டி பெயர் பலகையின் ராட்சத துாண் மீது பயங்கரமாக மோதியது.
ஒருவர் உயிரிழப்பு
இதையடுத்து ராட்சத துாண் சரிந்து சாலையின் குறுக்கே இருபக்கமும் விழுந்தது. அப்போது அந்த வழியாக கிண்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம், மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது வழிகாட்டி பெயர் பலகை விழுந்தது.
இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முக சுந்தரம் ராட்ச துாணின் அடிப்பகுதியில் சிக்கினார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வந்த அவரை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சண்முக சுந்தரம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.