தேரின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தேரின் சக்கரத்தில் முட்டுக்கட்டை போட முயன்ற போது சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.அவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல், திருசெங்காட்டுக்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில், தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு 2 மணிநேரம் கழித்து முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையில், அப்போது தீபாராஜன் என்ற இளைஞரின் மீது தேர் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களிமேடு கிராமத்தில் தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.