டெலிகிராம் குழுவில் கசிந்த தேர்வு வினாத்தாள் - அதிர்ச்சியில் பல்கலைக்கழகம்
கர்நாடக சட்டப் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப் பல்கலைக்கழக தேர்வு
கர்நாடக மாநில சட்டப் பல்கலைக்கழக (KSLU) தேர்வுகளுக்கான விஜிலென்ஸ் குழு தலைவர் கே.என்.விஸ்வநாதா வினாத்தாள் கசிவு குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், "விஜிலென்ஸ் குழு உறுப்பினர் ரவீந்திர ராஜ்புட், எனக்கு வாட்சாப்பில் கசிந்த வினாத்தாள் ஒன்றை அனுப்பி உண்மையான வினாத்தாளுடன் ஒத்துப்போகிறதா என உறுதிப்படுத்த அனுப்பினார்.
வினாத்தாள் கசிவு
சரிபார்த்தத்தில் அவர் அனுப்பிய வினாத்தாளில் உள்ள கேள்விகள் உண்மையான வினாத்தாளில் உள்ள கேள்விகளுடன் பொருந்தியது. இதனால் வினாத்தாள் கசிந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய பல்கலைக்கழக பதிவாளர் ரத்ன ஆர் பரமகவுடர், "மாணவர்களின் டெலிகிராம் குழுவில் கையால் எழுதப்பட்ட வினாத்தாள்கள் பகிரப்பட்டுள்ளது. இதில் வினாத்தாள்களை அணுகுவதற்கு தொடர்பு கொள்ள பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சிலரின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றுள்ளது.
இதனால் தங்களுக்கு இடைவிடாத அழைப்புகள் வருவதாக அந்த ஆசிரியர்கள் கூறியதையடுத்து, அவர்களை காவல்நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும் அந்த குழுவில் பகிரப்பட்ட கேள்விகள் உண்மையான வினாத்தாளுடன் பொருந்துகிறது. இது எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. காவல்துறை விசாரணையில் வினாத்தாள் கசிவு உறுதிசெய்யப்பட்டால் மறு தேர்வு நடத்தப்படும்." என தெரிவித்துள்ளார்.