ஐபிஎல் போட்டியில் மறக்க முடியாத தோல்வி - கண்கலங்கிய விராட் கோலி
ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட மறக்க முடியாத தோல்வி குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். இதனால் அந்த அணி வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலமாகவே தங்கள் அணிக்கான கேப்டனை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அப்போது முதல் தனக்கே உரித்தான ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் மூலம் ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடினார். அவருக்கு சிறப்பாக அமைந்த ஒரு சீசன் என்றால் அது ஐபிஎல் 2016 தொடர்தான். அந்தத் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் உட்பட 976 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.
அதன்பின் இதுபோன்ற ஒரு ஆட்டத்தை தற்போது வரை பெங்களூரு அணி வெளிப்படுத்தவே இல்லை. மேலும் கடைசி வரை ஐபிஎல் கோப்பை வெல்லாத கேப்டன் என்ற விமர்சனத்துடனேயே கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார்.இந்த நிலையில் ஐபிஎல் 2016 தொடர் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி பற்றி விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அந்த தோல்வி ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஏனென்றால் பெங்களூருவில் நடந்த அந்த இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே நாங்கள் அசத்தினோம். 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்திருந்த பின்னும் தோல்வி ஏற்பட்டது.அந்தப்போட்டியின் புகைப்படத்தை இன்னும் வைத்துள்ள கே.எல்.ராகுல், அந்த தோல்வியை நினைத்தால் வலிக்கிறது என கூறுவார். ஆம், அந்த தோல்வி இன்னும் வேதனையாக உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.