தமிழ்நாடு முழுவதும் அமுலுக்கு வந்தது “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு“ திட்டம்
தமிழகம் முழுவதும் 'ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமுலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவை யில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 'ஒரே நாடு,ஒரே குடும்ப அட்டை' திட்டம்தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களும், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அவர்களுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டு பொருட்களை பெறலாம். சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 2020-ம்ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க உதவி வழங்கப்பட்டது. மேலும், பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்பட்டது.
விலையில்லா கறவை மாடுகள்,வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம், கோழிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட முன்னோடி திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் வளர்ந்து ஏழை குடும்பங்களின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.