டிவி ஆன் செய்யவே முடியல - ஒரே திருடனுங்க கூட்டமா இருக்கு – ராதிகா சரத்குமார்!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து, அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் கூட்டணி அமைத்தது.
இந்த தேர்தலில் சமகவுக்கு 40 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. அதில் 37 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்து, 3 தொகுதிகளை கமலிடமே திருப்பிக்கொடுத்துவிட்டார். தற்போது சமக தலைவர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதாவை ஆதரித்து பிரச்சாரம் ராதிகா பிரச்சாரம் செய்தார்.
அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், “டிவியை ஆன் செய்தாலே, திமுகவினர் அதிமுகவினரை திருடன் என்று சொல்கிறார்கள், அதிமுகவினர் திமுகவினரை திருடன் என்று திட்டிக்கொள்கிறார்கள். ஆனால், இரண்டு கட்சியினருமே நாங்கள் திருடர்கள் கிடையாது என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் மக்கள் மாறி மாறி வாக்களித்தது போதும்.
இந்த முறை தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள். ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினைகள், இளைஞர்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர சொர்ணலதாவுக்கு வாக்களிங்கள். பெண் மற்றும் மண்ணின் உரிமைக்காக போராடியவர் காடுவெட்டி குரு. எனவே, ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து சொர்ணலதாவை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்யுங்கள் என்று பேசினார்.