கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ரூ.8493 அபராதம் - அதிரடியாக உத்தரவிட்ட ஐரோப்பிய நாடு
கடந்த ஒன்றரை வருடதிற்கும் மேலாக உலக நாடுகளையே கொரோனா வைரஸ் தலைகீழாக புரட்டிபோட்டு வருகிறது.
இன்றும் அதன் தாக்கம் குறையாத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவது உலக நாடுகளிடையெ பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிரீஸ் நாட்டில் கொரோனாவால் நாளொன்றுக்குச் சராசரியாக 6,500-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
நேற்றய தினம் கிரீஸில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், 60 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் வருகிற ஜனவரி 16-ம் தேதிக்குள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என அறிவித்திருக்கிறார்.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறுபவர்கள் மாதம் 114 யூரோ ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.8493) அபராதமாக அரசுக்குக் கட்டவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கிரீஸில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், கிட்டதட்ட 5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு புள்ளி விவரம் சொல்வதை சுட்டிக்காட்டி பேசும் எதிர்க்கட்சிகள், ``இத்தனை பேரையும் அபராதம் செலுத்தும் சூழலுக்குத் தள்ளுவது சரியல்ல" என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த பிரதமர், ``மக்களின் நன்மைக்காகத்தான் இந்த அறிவிப்புகள். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அரசு செய்யும்.
அப்படியும் செலுத்திக்கொள்ள முன்வராதவர்களுக்குத்தான் அபராதம். மேலும் இந்த அபராதமானது கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவமனைகளுக்கான செலவினங்களுக்கு ஒதுக்கப்படும்" என்று பதில் கூறியிருக்கிறார்.