இப்பதான் ஒமைக்ரான் பரவல் அபாய கட்டத்தை எட்டியுள்ளது: உலக சுகாதார அமைப்பு

who speed omicron
By Irumporai Dec 29, 2021 05:16 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன.

இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் மற்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றுகளை விட வீரியம் மிக்கதாக இருந்ததால், இந்தியாவில் 2-வது அலை உருவானது.

சில வெளிநாடுகளையும் புரட்டி போட்டது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் பணத்தை தண்ணீராக செலவழித்து தடுப்பூசிகளை செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது.

மே மாதத்திற்கு பிறகு ஓரளவு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் குறைந்து அப்படியே மறைந்து விடும் என மக்கள் நினைத்தனர். அந்த நிலையில்தான் கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாற்றம் வைரஸ் கண்டறியப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த வைரஸ் டெல்டாவை விட வீரியம் மிக்கது, பரவும் தன்மை அதிகம், தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டாக வெளியில் சுற்றும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரசை விட ஒமைக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.