மிரட்டும் ஒமைக்ரான் : மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முதலமைச்சர் ஆலோசனை

spread omicron onlineclasses
By Irumporai Dec 27, 2021 09:51 AM GMT
Report

ஓமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஓமைக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. இந்தியாவிலும் ஓமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்றைய நிலவரப்படி (டிச.27) 578 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், அசாம், கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், வரும் 31ஆம் தேதி ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடத்தவுள்ளார்.

இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர் குழு ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கூட்டத்திற்குப் பின் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில், "ஓமிக்ரான் வேகமாகப் பரவக்கூடிய வைரஸாக இருக்கிறது. இதனால் ஆரம்ப கட்டத்திலேயே சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்தால், தொற்று பாதிப்பு அதிகமாவதைத் தடுக்க முடியும்.

பள்ளிக் குழந்தைகள் நேரடி வகுப்புக்கு செல்வதால் அதன் மூலம் இவ்வகை வைரஸ் பெற்றோர், வீட்டில் உள்ள இணைநோய் உள்ளவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மருத்துவ சங்கம் கூறியுள்ளது.