ஒமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்து உள்ளது - மருத்துவர்கள் எச்சரிக்கை
ஓமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் இருப்பதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஓமைக்ரான் என்னும் புதிய வகை தொற்று அதிகளவில் பரவி வருகிறது. கடந்த வாரங்களில் கணிசமாக உயர்ந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக லட்சங்களை கடந்து பதிவாகி வருகிறது.
இதனால், இந்தியாவில் 3வது அலை கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக, சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் ஓமைக்ரான் பரவலால் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகிறது. ஓமைக்ரான் பாதிப்பு தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
இது ஓமைக்ரான் தொற்றின் மீதான அச்சத்தை உயர்த்தி உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாத பிரிவினரான குழந்தைகள் இந்த வகை பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று பரவலான கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் குழந்தைகள் நல மருத்துவரான திரேன் குப்தா கூறுகையில், கோவிட்-19ன் புதிய ஓமைக்ரான் மாறுபாட்டினால், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் இருக்கின்றனர்.
11-12 வயதிற்குட்பட்ட நோயாளிகள் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அதிக அறிகுறிகளைக் காட்டுகிறார்கள். ஆனாலும் குறைந்த ஆபத்தில் இருக்கின்றனர். டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் மாறுபாட்டின் நோயாளிகளில் மேல் சுவாச அறிகுறிகள் அதிகம் காணப்படுகின்றன என்றார்.
அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் குழந்தைகள் நல மருத்துவரான சுரன்சித் சாட்டர்ஜி கூறுகையில், “நோயாளிகளில் ஒரு சில பகுதியினர் நிச்சயமாக நோய்வாய்ப்படுவார்கள் என்பதால், நாம் நிச்சயமாக ஓமைக்ரானை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரித்து வருகிறது. உங்களுக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா இருந்தால், நீங்கள் நோய்வாய்ப்படுவீர்கள்.
நீங்கள் இளமையாக இருக்கலாம், நீங்கள் அதை கடந்து வரலாம் ஆனால் நீங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்களைச் சேர்ந்தவராக இருந்தால், அதை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய சில நோயாளிகள் வாசனை அல்லது சுவை தெரியவில்லை போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் ஓமைக்ரான் அறிகுறிகள் குறித்த தகவல்களை அரசு வெளியிடும் என்றார்.