அமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் - மக்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவில் முதல் ஆளாக ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்குமோ என்ற கேள்விக்கு இதுவரை எந்தவொரு மருத்துவ விஞ்ஞானியும் உரிய பதிலையும், விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இருந்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி தென் ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்கு வந்த ஒருவருக்கு நடத்திய பரிசோதனையில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவருடன் தொடர்பில் இருந்த 10க்கும் மேற்பட்டோரை சோதித்ததில் யாருக்கும் ஒமைக்ரான் கோவிட் பாதிப்பு கிடையாது என்பது தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு குறித்து அமெரிக்க சுகாதார துறை அதிகாரி அந்தோணி பவுசி நிருபர்களிடம் பேசுகையில், பாதிப்பு குறித்து உறுதி செய்துள்ளோம். இன்னும் நாம் பரவாமல் தடுக்க ஏற்கனவே கடைபிடித்த சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முழு அளவில் பின்பற்ற வேண்டும். மாஸ்க் வீட்டுக்குள்ளும் அணிவது மிக நல்லதுதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார்.