தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் ஒருவருக்கு முதல்முறையாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல விதிகளை விதித்துள்ளன.
இதனிடையே தமிழகத்தில் ஒருவருக்கு முதல்முறையாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து வந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 41 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது கர்நாடகா, ஆந்திரா, கேரளா , தெலுங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 10 மாநிலங்களில் 69 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.