10 மடங்கு வேகமாக பரவும் ஒமிக்ரான்.. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

omicron indianmedicalassociation covidthirdwave
By Petchi Avudaiappan Dec 07, 2021 09:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஒமிக்ரான் கொரோனா வைரஸை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மோசமான 3 ஆம் அலை ஏற்படும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகின் பல நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸின் உருமாறிய தோற்றமான ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக சுகாதார அமைப்பும் இந்த ஒமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. 

இந்த பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். தற்போதுள்ள தரவுகள் மற்றும் கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது ஒமிக்ரான் வேகமாகப் பரவி, அதிக மக்களைப் பாதிக்கும் என்றும், இந்தியா மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது ஒரு பெரிய பின்னடைவு. நாம் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாட்டில் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்டா கொரோனாவை காட்டிலும் இது 10 மடங்கு வேகமாகப் பரவும் திறனைக் கொண்டிருக்கலாம். எனவே ஒமிக்ரான் உருமாறிய கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர எடுக்க வேண்டும்.

தேவையற்ற பயணங்களை, குறிப்பாகச் சுற்றுலா மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும். அனைத்து பொது போக்குவரத்துக்கும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.