ஒமைக்ரான் வைரஸிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் - பிரதீப் கவுர்

ஒமைக்ரான் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி அவசியம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கி இருக்கிறது. வீரியம் கொண்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தமிழக பிரிவின் துணை இயக்குனராக பணிபுரிந்து வரும் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதோடு கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். ஒமைக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்ரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகள் என வகைப்படுத்தியதுடன் இங்கிருந்து, வரும் வெளிநாட்டு பயணிகளை விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்