சென்னையில் ஒருவரிடமிருந்து 94 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவல் - அதிர்ச்சி
சென்னையில் ஒருவர் மூலம் 94 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, புத்தாண்டு கொண்டாட்டத்தை பொது வெளியில் செய்யக் கூடாது என்று தமிழகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோளும் வைத்துள்ளார்.
மேலும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக டிசம்பர் 31ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஒன்றுகூடினால் நிச்சயம் தொற்று பரவல் இன்னும் வீரியம் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
31ம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த 17ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே அவருக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதுமட்டுமின்றி அவருக்கு எஸ்.ஜீன் என்ற ஒமைக்ரான் அறிகுறியும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலிகள், உடன் சிகிச்சை பெற்றவர்கள் என மொத்தம் 3,965 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நேற்று மாலை வரை 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த 94 பேரில் 64 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619ஆக பதிவாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் 194 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.