உருவெடுக்கும் ஒமிக்ரான் வைரஸால் இந்திய vs தென் ஆப்பிரிக்க போட்டிக்கு தடையா? - ரசிகர்கள் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் பல வகைகளில் ஊடுருவி வரும் நிலையில், தற்போது புதிய வகை கொரொனா வைரஸான ஓமிக்ரோன் (omicron) பெரும் பீதியை உலக நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், பல நாடுகளில் சோதனையை தீவிரப்படுத்த உள்ளது. இதனிடையே புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தென்ஆப்பிரிக்காவில் (south africa) விளையாட்டு போட்டிகள் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதலாவது ஒரு நாள் போட்டியில் நேற்று விளையாடிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி எஞ்சிய இரு போட்டிகளை ரத்து செய்து விட்டு தாயகம் திரும்ப உத்தேசித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. ஆனால், வைரஸ் மிரட்டல் காரணமாக இந்திய அணி அங்கு செல்ல முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதைப்பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், தற்போது அங்கு அடிப்படையான சூழ்நிலை என்ன என்பதை பற்றி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளோம். அது தெரியும் வரையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதுவும் சொல்ல முடியாது. தற்போதைய திட்டத்தின்படி இந்திய அணி நியூசிலாந்து தொடர் முடிந்து டிசம்பர் 8 அல்லது 9-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.
மேலும், போட்டி அட்டவணைப்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது.
ஆனால் வடக்கு தென்ஆப்பிரிக்காவில் தான் புதிய வகை வைரஸ் தொற்று காணப்படுகிறது. அதனால் ஜோகன்னஸ்பர்க், செஞ்சூரியன் ஆகிய இரு மைதானங்களில் நடக்க உள்ள போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம்.
இதனால், அடுத்து வரும் நாட்களில் நிலைமையை பொறுத்து, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவு எடுக்கும். தற்போது இந்திய ஏ அணி தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது