முதல் போட்டியிலேயே அசத்திய ஓமன் அணி - 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான போட்டியில் ஓமன் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.
முதல் நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் ஓமனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஓமன்- பப்புவா நியூ கினியா அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணியில் கேப்டன் ஆசாத் வாலா 56 ரன்கள், சார்லஸ் அமினி 37 ரன்கள் குவித்த நிலையில் மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது. ஓமன் தரப்பில் அதிகப்பட்சமாக -சீஷன் மக்சூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் அகிப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் பப்புவா நியூ கினியா அணியின் பந்துவீச்சை வெளுத்தெடுத்தனர். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
ஓமன் அணி 13.4 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. ஜதிந்தர் சிங் 42 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 73 ரன்களும், அகிப் இல்யாஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்கருடன் 50 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஓமன் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.