ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழ்பெண்: குவியும் பாராட்டுகள்
தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளா் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூா்வ தரவரிசையின் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றாா்.
ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களைச் சோ்ந்தோா் டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிபெறுவதற்காக உலகத் தரவரிசையின் அடிப்படையில் இரு இடங்கள் இருந்தன. உலகத் தரவரிசையில் தற்போது 45-வது இடத்திலிருக்கும் பவானி தேவி, அதில் ஓா் இடத்தை உறுதி செய்துள்ளாா்.
வரும் ஏப்ரல் 5-ம் திகதி திருத்தப்பட்ட உலகத் தரவரிசை வெளியாகும்போது, பவானி தேவி ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றது அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அவா் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முயற்சித்து தோல்வியடைந்த பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்காகப் பயிற்சியாளா் நிகோலா ஜனோடியின் மேற்பாா்வையில் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அவருடைய பல வருட முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் ஓர் விடிவுகாலம் வந்துள்ளது.