ஒலிம்பிக் படகுப் போட்டி - இந்திய வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்ற முதல் தமிழக வீராங்கனை!
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் படகோட்டும் பிரிவில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன் இந்திய வரலாற்றில் முதல் முறையாக தகுதிபெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனைப் படைத்திருக்கிறார். ஜூலை 23-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளுக்கான ஆசியத் தகுதி சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்குத் தமிழகம் சார்பில் மட்டும் இதுவரை டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் என 3 பேர் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
இதனையடுத்து, படகோட்டும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமனன் முதல் முறையாக படகோட்டும் பிரிவில் தேர்ச்சிபெற்று சாதனைப் படைத்திருக்கிறார்.

படகோட்டும் போட்டியில் இதுவரை இந்தியாவின் சார்பில் யாரும் தகுதி பெறவில்லை. முதல் முறையாக இப்போட்டியில் தகுதி பெற்றுள்ள நேத்ரா குமனன் (23) சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் படகோட்டும் போட்டியில் தனிநபர் பிரிவில் (Laser Radial) பங்கேற்றிருக்கிறார். பொறியாளரான நேத்ரா குமனன் கடந்த 2014, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.
அமெரிக்காவில் உள்ள மியாமில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் படகோட்டுதல் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றார். படகோட்டும் போட்டியில் சிறுவயதிலிருந்தே ஆர்வத்தோடு கலந்துகொண்டுவரும் நேத்ரா தற்போது ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்.