விருதுநகரில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே தவசி லிங்க புரத்தில் 400 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் இருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழி தவசிலிங்கபுரத்தில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளரும் முனைவர் து .முனீஸ்வரன் தலைமையில் பேராசியர்கள் முனைவர் லட்சுமண மூர்த்தி முனைவர் ஆதி பெருமாள் சாமி ஆகியோர் கள ஆய்வு செய்தபோது ஊரணியின் உட்பகுதியில் வில்லை ஏய்ந்த நிலையில் வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, "சங்ககால தொடக்கத்திலிருந்து தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர் , பூசல் காரணமாக இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை இருந்துள்ளது.
இந்நிலையில் தவசி லிங்க புரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல் 2 ½ அடி உயரமும் 1 ½ அடி அகலமும் உள்ளது. வீரனின் உருவத்தின் இடது கையில் வில்லை பிடித்தபடியும் வலது கையில் வில் அம்பு ஏய்தாவாறும் காட்சி தருகின்றான்.
வீரன் காலில் வீரக்கழலும் இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாளுடனும் நீண்ட காதுகள், இடது புறம் சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு காட்சி தருகிறான். இச்சிற்பத்தின் மேல்பகுதி நாசிக்கூடு கொண்ட தோராணை வளைவுடன் புடைப்பு சிற்பமாக வில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இச்சிற்பத்தை ஆய்வு செய்யும்போது இப்பகுதியில் வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். இதன் காலம் கி பி 17 ம் நூற்றாண்டு. தற்போது மக்கள் மாலைக்கோவில் என்று வழிபட்டு வருகின்றனர்" என்றார்.