'பஸ்சை நேரா பச்சபாளையத்துக்கு விடு' - வண்டி மாறி ஏறிவிட்டு ஓட்டுனருக்கு ஆர்டர் போட்ட மூதாட்டியால் பரபரப்பு!

Coimbatore
By Swetha Subash May 28, 2022 01:59 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

பஸ் மாற்றி ஏறிவிட்டு ஓட்டுனருக்கு ஆர்டர் போட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உக்கடம், மதுக்கரை வழியாக பாலத்துறை செல்லும் 50-ம் நம்பர் டவுன் பஸ்சில் 75 வயதான மூதாட்டி ஒருவர் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்து நடத்துனர் வினோத் என்பவர், மூதாட்டியிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மூதாட்டி பச்சாபாளையம் செல்ல வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.

இதை கேட்டு குழம்பிய பேருந்து நடத்துனர் இந்த பேருந்து பணிமனைக்கு செல்கிறது, நீங்கள் வேறு பஸ்சில் ஏறி செல்லுங்கள் என்று கூறினார்.

அதற்கு, நான் கீழே இறங்க மாட்டேன், பஸ்சை மேற்கு நோக்கி பச்சாபாளையத்துக்கு விடு என்று அந்த மூதாட்டி கூறியுள்ளார்.

இந்த பஸ் பச்சாபாளையத்துக்கு செல்லாது பணிமனைக்குதான் செல்கிறது, நீங்கள் பஸ் மாறி ஏறிவிட்டீர்கள், கீழே இறங்கி வேறு பஸ்சில் ஏறி செல்லுங்கள் என்று நடத்துனர் கூறியதற்கு, அந்த மூதாட்டி, இந்த பஸ் பச்சாபாளையத்துக்கு செல்லாது என்று எழுதி கொடு... நான் கீழே இறங்கி செல்கிறேன் என்று அடம் பிடித்துள்ளார்.

உடனே அங்கு வந்த ஓட்டுனரும் மூதாட்டியை இறங்க சொல்ல, அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டே நான் இறங்க மாட்டேன் எனக் கூறி தகராறு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் அந்த மூதாட்டியிடம் பக்குவமாக பேசி பஸ்சில் இருந்து இறக்கிவிட்டனர்.

இதை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததை அடுத்து அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.