தேர்தல் நடக்கும் இடங்களில் மது விற்கத் தடை – தேர்தல் ஆணையம் அதிரடி!
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் நடக்கும் இடங்களில் மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சி ஒரு பக்கம் எதிர்க்கட்சி மற்றொரு பக்கம் என அனல்பறக்க பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. வரும் 6ம் தேதி நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் 17,130 காவல்துறையினரும் 3,405 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். 9ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 16,006 காவல்துறையினரும் 2,867 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தலை சுமுகமாக நடத்தும் பொருட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் போலீசாரை குவிக்க மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 7ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தன்றும் மதுக்கடை மற்றும் மதுபான கூடங்களை மூட உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.