சொத்து ஆசை: 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் மூதாட்டி சிறை - உறவினர் வெறிச்செயல்!
சொத்துக்காக ஆசைப்பட்டு மூதாட்டி ஒருவரை 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியுள்ளது.
வீட்டு சிறை
திருவாரூர் மாவட்டம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்த தம்பதி பழனித்துரை-ஜெயம் (65). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கணவர் பழனித்துரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.
இதனால் மூதாட்டி ஜெயம் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு வீட்டுடன் உள்ள சொத்துகளும், சில நிலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
இவரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர் ஒருவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியை வீட்டில் வைத்து பூட்டி சிறை வைத்துள்ளார். அவருக்கு வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு வேலை மட்டுமே சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.
பரிதவிக்கும் மூதாட்டி
இதனால் பூட்டிய வீட்டில் ஜன்னல் வெளிச்சத்தில் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல், உடை கூட இல்லாமல், உடல் மெலிந்த நிலையில் மூதாட்டி தனிமையில் தவித்து வந்துள்ளார்.
அந்த பூட்டிய வீட்டிலேயே இயற்கை உபாதைகளை கழித்தும், அதே இடத்தில் உறங்கியும் வந்துள்ளார். இந்நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டியை காப்பாற்றுவதற்காக அந்த பகுதியை சிலர் அவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். அந்த மூதாட்டி பராமரிப்பின்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.