வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் மயங்கி விழுந்து பலி!
வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற 62 வயது முதியவர் மயங்கி கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், சினிமா பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். அதேபோல் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், மக்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி அய்யம்பேட்டையில் வாக்கு பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு அர்ஜுனன் (62) என்ற முதியவர் வாக்களிக்க வரிசையில் வந்து நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக நின்றிருந்த அவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக மீட்டு காவல்துறையினர் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினார்கள்.
நெஞ்சுவலி மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தினால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், சோகமும் ஆழ்ந்துள்ளனர்.