கைவிட்ட பிள்ளைகள்; ரூ. 1.5 கோடி வீடு, நிலத்தை அரசுக்கு கொடுத்த முதியவர்

Uttar Pradesh
By Sumathi Mar 07, 2023 05:05 AM GMT
Report

பிள்ளைகள் பராமரிக்காததால் முதியவர் ஒருவர் தனது 1.5 கோடி மதிப்புள்ள சொத்தை அரசுக்கு கொடுத்துள்ளார்.

கவனிக்காத பிள்ளைகள்

உத்தரப் பிரதேசம், முசாபர்நகரைச் சேர்ந்தவர் நாது சிங் (85). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இவரது மகன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 4 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இதனால், நாது சிங் சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

கைவிட்ட பிள்ளைகள்; ரூ. 1.5 கோடி வீடு, நிலத்தை அரசுக்கு கொடுத்த முதியவர் | Old Man Gave Rs 1 5 Crore House Land To Government

இவரை மகன், மகள்கள் பராமரிக்காததால் முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார். அங்கும் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால், இவருக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு, விவசாய நிலங்களை உயில் எழுதி அதை சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்துள்ளார்.

 விரக்தி

இதுகுறித்து முதியவர், எனக்கு இப்போது 85 வயதாகிறது. என்னுடைய இந்த வயதில் நான் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் வீட்டில் வசித்துவந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னை பராமரிக்கவில்லை. உதாசீனம் செய்தனர்.

எனவேதான் என்னுடைய வீடு,நிலங்களை அரசுக்கு உயில் எழுதிவைத்துவிட்டேன். நான் இறந்தபிறகு அந்த இடத்தில் பள்ளி, மருத்துவமனையை அரசு கட்டவேண்டும். மேலும் எனது உடலையும், மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் எழுதிக் கொடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சார் பதிவாளர், “நாது சிங் எழுதி வைத்துள்ள உயில் எங்களிடம் வந்து சேர்ந்துள்ளது. சட்டப்படி அவருடைய உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்குப் பின் அரசு சட்டப்படி அவரது சொத்துகளை எடுத்துக்கொள்ளும்” எனக் கூறியுள்ளார்.