வாய் பேச முடியாத மூதாட்டியை கட்டையால் சித்திரவதை செய்த பக்கத்து வீட்டுக்காரர்
திருப்பூரில் வாய் பேச முடியாத மூதாட்டியை கட்டையால் தாக்கிய கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பனத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குப்பன்- ஜக்கம்மாள் தம்பதியினர். இதில் ஜக்கம்மாள் வாய்பேச முடியாத நிலையில் உள்ளார். இதனிடையே இவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் செல்லமுத்து என்பவரிடம் வீடு கட்டுதல் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது.
இந்த சூழலில் செல்லமுத்துவின் வீடு கட்டுமானத்திற்கான செங்கல்லானது பாதையின் நடுவே கொட்டப் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜக்கம்மாள் தன் வீட்டிற்கு கட்டுமான பொருட்கள் கொண்டுவர வண்டி வாகனம் வர முடியாத நிலையுள்ளதாகவும், செங்கலை ஓரமாக வைத்துக் கொள்ளுமாறு ஜாடையில் செல்லமுத்துவின் மனைவி மஞ்சுவிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
நடந்ததை அறிந்து ஆத்திரமடைந்த செல்லமுத்து விறகு கட்டையின் மூலம் ஜக்கம்மாவை கை, கால் என சரமாரியாக கட்டையை வைத்து தாக்கியுள்ளார். வாய் பேச முடியாத நிலையில் ஜக்கம்மாள் அலறித் துடித்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வரவும் செல்லமுத்து அங்கிருந்து தப்பியோடினார்.
ஜக்கம்மாளை மீட்ட அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அதிகப்படியான காயங்களும், எழும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தினால் அவர் கோவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.