கொரோனாவால் உயிரழந்ததாக புதைக்கப்பட்டவர் உயிரோடு திரும்பியதால் பரபரப்பு
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கொரோனா தடுப்பு நெறிகளை பின்பற்றி அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது.
அவ்வாறு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரிஜம்மா. இவர் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் கொரோனா விதிகளை பின்பற்றி கிரிஜம்மா உடல் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் கிரிஜம்மா மரணத்தை முன்னிட்டு அவருடைய வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது. அப்போது திடீரென்று உடல் நிலை தேறி கிரிஜம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அதிகாரிகளின் அசட்டை காரணமாக உயிருடன் உள்ள கிரிஜம்மா இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கிரிஜம்மாவின் உடல் என்று கருதி புதைக்கப்பட்டது யாருடைய உடல் என்ற குழப்பமும் தற்போது ஏற்பட்டுள்ளது.