கற்பனை நாட்டுடன் ஒப்பந்தம் - நித்யானந்தாவால் பறிபோன அரசு அதிகாரியின் பதவி!
நித்யானந்தாவின் கற்பனை நாடான கைலாசா பிரதிநிதிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏமாந்ததால் பராகுவே நாட்டு வேளாண் துறை செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கைலாசா நாடு
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா (45). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நித்யானந்தாவுக்கு ஏகப்பட்ட சீடர்கள் உள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடன் இவர் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. மேலும், பாலியல் புகார், ஆள் கடத்தல், பண மோசடி என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து மாயமானார். இதனையடுத்து கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக அவர் அறிவித்தார். கைலாசா என்ற நாடு எங்குள்ளது என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.
பறிபோன பதவி
அதுமட்டுமல்லாமல் அந்நாட்டுக்கு தனிக்கொடி, பாஸ்போர்ட், கரன்சி வெளியிட்டதுடன், இந்தியர்கள் கைலாசா குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார் நித்யானந்தா.
இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பராகுவேவின் வேளாண் துறை செயலர் அர்னால்டோ சாமோரோ, சமீபத்தில் கைலாசா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியானதையடுத்து, கற்பனையான நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது கேலிக்குள்ளானது.
இதையடுத்து, அர்னால்டோவின் பதவி பறிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அர்னால்டோ சாமோரோ "கைலாசா நாட்டு பிரதிநிதிகள், தன்னையும், வேளாண் துறை அமைச்சர் கார்லோஸ் கிமென்சையும் சந்தித்தனர். பராகுவேவுக்கு பல்வேறு உதவிகள் அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்" என அவர் கூறியுள்ளார்.