சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குளிர்பான ஆலையை மூட உத்தரவு
சென்னையில் குளிர்பானம் அருந்தி 13வயது சிறுமி உயிரிழந்ததாக வந்த புகாரையடுத்து குளிர்பான ஆலையை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சதீஷ் -காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் குளிர்பானம் ஒன்றினை வாங்கி குடித்துள்ளார்.
இதையடுத்து சிறுமி வாந்தி வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். மேலும் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியதால் உறவினர்கள் சிறுமியை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது ஏற்கனவே சிறுமி தரணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி குடித்துவிட்டு மீதம் வைத்த குளிர்பானம் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் குளிர் பானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்நிலையில் ஆலையை தற்காலிகமாக மூட அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் உத்தரவிட்டுள்ளார்.