ஒடிசா அரசியல் : மொழியே தெரியாதவர் முதல்வரான கதை
ஒடிசா வரலாறு
ஒடிசாவின் வரலாறு துவக்கக் காலப் பகுதி பெரும்பாலும் தெளிவாக இல்லை, இப்பிராந்தியத்தைப் பற்றி சில குறிப்புகள் மகாபாரதம், மகா கோவிந்த சுதா மற்றும் சில புராணங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்படுகிறது.
கி.மு. 261 இல் இப்பகுதி, மவுரிய பேரரசின் அசோகரால் கலிங்கப் போரின் ரத்த வெள்ளத்தில் கைப்பற்றப்பட்டது. இப்போரின் அழிவுகள் அசோகரை மனதளவில் பெரும் பாதிப்பை உள்ளாக்கியது. இதனால் அமைதிவழிக்கு திரும்பிய அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்.
இதன் பிறகு அவர் பல்வேறு அயல் நாடுகளுக்கு அமைதித் தூதுவர்களை அனுப்பினான். இவ்வாறு இவர் செயல்பட்டதில் ஒரு மறைமுக விளைவாக, ஆசியாவில் புத்த மதம் பரவியது.
நவீன்பட்நாயக்
ஒடிசாவை பொறுத்தவரை இங்கு அரசியல் முகமாக உள்ள நவீன் பட்நாயக்கின் கதை மிகவும் முக்கியமானது,தமிழ் தெரியாதவர் தமிழக முதல்வராக வர முடியுமா, இந்தி தெரியாதவர் உத்தர பிரதேச முதல்வராக வரமுடியுமா? சிரமம்தானே? ஆனால், நவீன் பட்நாயக்கிற்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. நவீனின் ஒடிசா மாநிலம் வித்தியாசமானது. ஏராளமான முரண்களை உடைய மாநிலம் இது.
இந்தியாவிலேயே கல்வியறிவு குறைவான மாநிலம் இது. ஆனால், போட்டி தேர்வுகளில் ஒடிசா மாணவர்களின் வெற்றி வியக்கதக்க வகையில் இருக்கும். புள்ளி விவர கணக்குகளில் ஒடிசாவில் பொது சுகாதாரம் பின் தங்கி இருக்கும். ஆனால், அந்த மாநிலத்தின் வீதிகள் ஒப்பிட்டளவில் சுத்தமாகவே இருக்கும் நவீனின் தந்தை பிஜு பட்நாயக் ஒடிசா முதல்வராக மட்டும் இருக்கவில்லை.
அவர் அனைவரும் அறிந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் விமானிஇரண்டாவது உலகப் போரின் போது ரஷ்யப் படைவீரர்களுக்கு ஆயுதங்களை வழங்க விமானத்தை ஓட்டிக் கொண்டு அஜர்பைஜான் சென்றார். 1942ம் ஆண்டு ஜப்பான் முற்றுகையினால் பர்மாவில் சிக்கிக் கொண்ட பிரிட்டன் வீரர்களை குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் சென்று மீட்டார்.
பிஜுவின் மரணத்திற்கு பின், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனீஷியா உள்ளிட்ட மூன்று நாடுகளின் கொடிகள் போர்த்தப்பட்டிருந்தன. ஆக ஓடிசாவின் அரசியல் வரலாற்றில் நவீன் பட்நாயக் ஒரு முக்கிய முகம் என்றால் அது மிகையல்ல