ஈஎம்ஐ மூலம் பைக் வாங்க பிறந்த குழந்தையை விற்ற தந்தை
பிறந்து 10 நாள் ஆன குழந்தையை விற்று தந்தை ஈஎம்ஐ மூலம் பைக் வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2வது திருமணம்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் ஹத்மாத் கிராமத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவருக்கு ஏற்கனவே முதல் திருமணத்தின் மூலம் 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் சாந்தி பத்ரா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார்.
சாந்திக்கும் முன்னரே திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. பின்னர் தர்முவை திருமணம் செய்த பின் இந்த தம்பதிக்கு மற்றொரு குழந்தை பிறந்தது. இதனையடுத்து, கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்காக சாந்தியை சேர்த்துள்ளார்.
புது பைக்
அங்கு இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து டிசம்பர் 22ம் தேதி சாந்தி பெஹரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை சைன்குலாவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்று, இஎம்ஐயில் பைக் வாங்கியுள்ளார் தர்மு.
குழந்தையை விற்று வாங்கிய புது பைக்கில் தர்மு தம்பதி ஊருக்குள் வந்த போது, ஊர் மக்கள் இது குறித்து குழந்தைகள் நலக் குழுவிற்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த குழந்தைகள் நலக் குழு (CWC) காவல்துறையினரிடம் சேர்ந்து குழந்தையை வாங்கிய தம்பதியினரிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர்.
குழந்தையை விற்ற மற்றும் வாங்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். குழந்தையை வளர்க்க பணமில்லாததால் குழந்தை இல்லாத தம்பதிக்கு உரிய தானமாக வழங்கியதாக தர்மு சாந்தி தம்பதி தெரிவித்துள்ளார்.