ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை; தனியார் நிறுவனங்களுக்கும் அமலுக்கு வரும் சட்டம்
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
மாதவிடாய் விடுமுறை
மாதவிடாய் காலங்களில் பெண்கள் மாதவிடாய் வலி மற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதால் அந்த நாட்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.
சில தனியார் நிறுவனங்களில் விடுமுறை அளித்தாலும் அது கட்டாயமாக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாதவிடாய் நன்மைகள் மசோதா என்ற சிறப்பு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாட்டின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு 2 நாட்கள் மாதவிடாய் விடுப்புகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இந்த மசோதா இன்னும் அமலுக்கு வரவில்லை.
தனியார் நிறுவன பெண்கள்
இந்நிலையில் இன்று ஒடிசாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒடிசா மாநில துணை முதல்வர் பிராவதி, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்றும் இது அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் பொருந்தும் என கூறியுள்ளார்.
மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2 வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என கூறிய அவர் இந்த திட்டம் உடனே அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை கேரளா மற்றும் பீகாரில் அமலில் உள்ள நிலையில் . தற்போது ஒடிசாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.