யூடியூப் ட்ரெண்டிங்கில், தொடர்ந்து இரண்டாவது நாளாக முதல் இடம் வகிக்கும் “ஓ சொல்றியா மாமா” பாடல்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.
இம்மாதம், 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்தின் பாடல்களும் ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.
ஏற்கெனவே, இப்படத்தின் ‘ஸ்ரீவள்ளி’, ‘சாமி’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில், 'ஓ அந்தவா’ மூன்றாவது பாடல் கடந்த வாரம் வெளியானது.
இந்த பாட்டில் நடிகை சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளதாலும் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையாலும் தென்னிந்திய ரசிகர்களிடம் இப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
வெளியான ஒரே நாளில் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதிக பார்வைகளைக் கடந்த பாடல் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. யூடியூபில் இதுவரை 27 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தெலுங்கில் பாடலாசிரியர் சந்திரபோஸ் வரிகளில் இந்தராவதி செளகான் குரலில் பாடல் அமைந்துள்ள நிலையில், தமிழிலும் விவேகாவின் வரிகளில் நடிகை ஆண்ட்ரியா ’ஓ சொல்றியா’ பாடலைப் பாடியுள்ளார்.
பாடலுக்கு ஒருப்புறம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் மறுப்புறம் ஆண்கள் சங்கத்திடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதில் வரும் பாடல் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாக பாடலுக்குத் தடைக்கோரி ஹைதராபாத்தில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தமிழகத்திலும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், ஓ சொல்றியா பாடல் வெளியாகி மூன்றே நாட்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலாவது இடத்தில் இருந்து வருகிறது.
மேலும் யூடியூபில் 4 மில்லியன் பார்வையாளர்களை நெறுங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஹிட் அடித்துள்ளது.