தமிழ் தமிழ்'னு சொல்லி கொண்டு ஆங்கிலத்தில்...! 2 மாதத்திற்குள் - ஓபிஎஸ் கண்டனம்

M K Stalin O Paneer Selvam Tamil nadu ADMK DMK
By Karthick May 15, 2024 12:50 PM GMT
Report

யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையினை தமிழாக்கம் செய்து பொதுமக்களின் கருத்துகளை பெறாமல் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் என குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை

அவரின் அறிக்கை வருமாறு,

மனித - யானை மோதல் என்பது மிகவும் சிக்கலானது என்பதும், இந்த மோதலை தீர்க்கக்கூடிய மிகப் பெரிய கவலை மாநில அரசுகளுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும், இயற்கை அமைப்புகளுக்கும் உண்டு என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

O pannerselvam press meet

தமிழ்நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் யானைகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதன் விளைவாக, கடந்த பல ஆண்டுகளாக மனித உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, கோயம்புத்தூர், கூடலூர், சத்தியமங்கலம் மற்றும் ஓசூர் வனப் பகுதிகளில் மனித-யானை மோதல்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இதன் காரணமாக மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதனைத் தடுக்கும் வகையில், யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடத்தை அடையாளம் காணுதல், யானைகள் வழித்தடத்துக்கான உடனடி மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய யானைகள் வழித்தடத் திட்டத்தினை மேற்கொள்ள அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கான வரைவு அறிக்கையும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தமிழ் என்று

தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்திலே அறிக்கை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பது நியாயமற்ற செயல். ஒருவேளை நியாயமற்ற முறையில் செயல்படுவதுதான் 'திராவிட மாடல்' அரசு போலும். மேலும், இந்த வரைவு அறிக்கைமீது மே முதல் வாரத்திற்குள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது அவசர கதியில் தி.மு.க. அரசு செயல்படுவது போலத் தோன்றுகிறது.

O pannerselvam press meet

தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தாலும், வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில்,

பெண்களுக்கு free பஸ் - மத்த பஸ்ஸில் அதிக கட்டணம் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

பெண்களுக்கு free பஸ் - மத்த பஸ்ஸில் அதிக கட்டணம் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

குறிப்பாக ஒவேலி, தேவர் சோலை, கரியசோலை, மசினகுடி பகுதிகளில் வசிக்கும் மக்கள் கருத்துகளை தெரிவிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆங்கிலத்தில் உள்ள வரைவு அறிக்கை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டால்தான் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க முடியும் என்றும், கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசம் குறைந்தபட்சம் 60 நாட்களாவது இருக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இரண்டு மாதத்திற்குள்

ஒரு செயல் திட்டத்தை அரசு செயல்படுத்தும்போது, அப்பகுதிகளை ஒட்டியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கும் தீர்வு காணும் வகையில் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதுதான் சரியான நடைமுறை. இந்த நடைமுறையினை அரசு பின்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

M K stalin silent

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, குழு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடவும், அதன்மீது பொதுமக்களின் கருத்துகளை இரண்டு மாதத்திற்குள் கேட்டுப் பெறவும், மக்களுடைய கருத்துகளின் அடிப்படையில், மக்களின் விருப்பத்திற்கிணங்க திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.