அதிமுக -வில் சசிகலா? ஓபிஎஸ்-ன் பதிலால் சலசலப்பு
சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதால் சலசலப்பு அதிகரித்துள்ளது.
மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சபதமிட்டுள்ள சசிகலா, அதற்கான முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி காட்டமாக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்நிலையில், சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக கழகத்தின் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மினி கிளினிக் போன்ற அனைத்து மக்கள் நல திட்டங்களையும் திமுக அரசு நிறுத்த கூடாது, தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி நாங்கள் போராடுவோம்.
திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள். காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள், அது நடக்காது. அரசியல் இயக்கங்களை நடத்துகிறவர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அது தொண்டனாக இருந்தாலும், தலைவனாக இருந்தாலும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இந்த மாறுபட்ட கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.