அதிமுகவில் சேர நான் ரெடி..! OPS-யின் பரபரப்பு பேட்டி
அதிமுகவில் இணைவதற்கு நான் தயாராக இருக்கிறேன், என்னை இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமியும் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
சட்டப்போராட்டம்
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் உரிமைகளை பெறுவதற்கு நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.
தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்களா என்பதை அறியவே இராமநாதபுரத்தில் நான் போட்டியிட்டேன்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 நபர்களை நிறுத்தி செயற்கையாக சூழ்ச்சி செய்தனர்.
அதனை எல்லாம் முறியடித்து அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இன்று வரை சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தயாரா?
மேலும் அதிமுக மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே எங்களின் தலையாய கோரிக்கை, அதையே டிடிவி தினகரனும் வலியுறுத்துகிறார்.
இருவரும் ஒரே கருத்தை கூறும்போது, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய எடப்பாடி பழனிசாமி தான்.
அதிமுக-வில் இணைய நான் தயாராக இருக்கிறேன், என்னை இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமியும் தயாரா? என கேள்வி எழுப்பினார்.
தனிக்கட்சி தொடங்குவது அல்லது தனித்து போட்டியிடுவது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் ஆதாரமில்லாத தகவல்கள் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
